Wednesday, June 17, 2009

crazy kirukkal

விதவிதமாய் குரலெழுப்பி
ஏதேதோ பேசுகின்றாய்
யாரென எட்டிப்பார்தால்
மரத்தினிடை ஒளிகின்றாய்

வானளக்கப் பிறந்துள்ளாய்
கீழோன் எனை அஞ்சுவதேன்?
பார்க்கத்தானே விழைகின்றேன்
அதையும் கூடத் தடுப்பது ஏன்?

உன் உலகம் என் வியப்பு
அதைக்காண ஏன் மறுப்பு?
என் உலகும் குறைந்ததில்லை
நீ வந்திருக்கத் தடையும் இல்லை

நீ கூடு கட்டி வாழ்ந்திட
என் கூடத்தில் இடமுண்டு
நீ இரை தேடப்போகையிலே
உன் வீட்டிற்கென் காவலுண்டு

நான் பொங்கி வைக்கும் சோற்றினிலே
உனக்கென்று பங்கு வைத்து
நீ கொத்தித் தின்னும் அழகினை
ரசித்துப் பார்க்கும் எண்ணமுண்டு

எனைக் கண்டு அஞ்சுவதில்
பலன் என்ன கண்டுவிட்டாய்?
தீங்கிழைப்பேன் என நீயும்
எதைக்கண்டு எண்ணிவிட்டாய்?

உலகம் சுற்றும் சிறு சிட்டே
உன் மீது காதல் கொண்டேன்
நான் ஆசை தீர உனைப்பார்க்க
சற்று நெரம் வந்திடு நீ